Monday, 12 January 2015

இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பும், இந்திய பாதுகாப்புச் சட்டமும்

நமது தேசத்துத் தொழிலாளர்களின் பாதுகாப்பும், பாதுகாப்புச் சட்டமும் சிக்கலாகவும், குழப்பமாகவும் உள்ளது. அது ஏன் அவ்வாறு உள்ளது என்பதை இக்கட்டுரையை வாசித்து முடிக்கும் தருணத்தில தங்களால் நன்றாக அறிந்து கொள்ள முடியும் . இந்தியாவில் போபால் பேரழிவுக்குபின் பாதுகாப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1948ஆம் ஆண்டு இயற்றப்பெற்று 1949 ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்திய மற்றும் தமிழ் நாடு தொழிலகச் சட்டத்தின்படி(1948) ஒரு தொழிற்சாலையில் 1000 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி(Safety Officer) நியமிக்கப்படவேண்டும். ஆனால் 1000திற்கு அதிகமாக 2000,3000,4000 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் எவ்வளவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை. சில மாநில தொழிலகச் சட்டத்தின்படி 1000 முதல் 2000 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி(Safety Officer) நியமிக்கப்படவேண்டும் என்றும் 2000 முதல் 3000 தொழிலாளர்க்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள்(Safety Officer) நியமிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்படுள்ளது. சில மாநிலங்களில் 1000 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி(Safety Officer) நியமிக்கப்படவேண்டும், ஆனால் 1000திற்கு அதிகமாக 2000,3000,4000 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் எவ்வளவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை. இவை குழப்பமாகவே இருக்கிறது. இதற்கு என்று ஒரு சரியான பட்டியல் கிடையாது. தமிழ்நாடு கட்டிடம் மற்ற கட்டுமான தொழிலாளர்கள் (தொழில் மற்றும் சேவை நிபந்தனைகள் கட்டுப்பாடு) 2006, விதிப்படி ஒரு கட்டுமான நிறுவனத்தில் 500 முதல் 2000 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி(Safety Officer) நியமிக்கப்படவேண்டும். இவ்வாறு கட்டுமான நிறுவனத்தில் 2000 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு இரண்டு அதிகாரிகள்(Safety Officer) நியமிக்கப்படவேண்டும், இதுவே 5000 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு முன்று அதிகாரிகள்(Safety Officer) நியமிக்கப்படவேண்டும்,10000 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு நான்கு அதிகாரிகள்(Safety Officer) நியமிக்கப்படவேண்டும். ஆனால் கப்பல் துரையில்,நிலக்கரி சுரங்கத்தில்,எண்ணெய் சுரங்கத்தில் மற்றும் அரசாங்க நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்க்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு பாதுகப்பு அதிகாரி நியமிக்கபடுவார் மற்றும் இவை அரசாங்கத்தின் பாதுகாப்பு துறையின் மேற்பார்வையில் இயங்கும்.

பாதுகாப்பு அதிகாரியின்(Safety Officer)கடமைகள்:
தொழிற்சாலையை முழுமையாக ஆய்வு செய்து ஏதேனும் ஆபத்துக்கள் இருகின்றனவா? அவ்வாறு இருந்தால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள தகுந்த நடவடிக்கை எடுத்தல். ஆய்வு மேற்கொள்ளும் பொழுது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் நிலை, இயந்திரங்களின் பாதுக்கப்பு சாதனங்களின் நிலை,கருவிகளின் நிலை,வேலைச்செய்யும் இடத்தின் நிலை, தொழிற்சாலையின் வெப்பநிலை, காற்றோட்ட நிலை,தொழிற்சாலையின் வெளிச்சத்தின் அளவு, இயந்திரங்களில் வெளிபடுத்தப்படும் ஒலியின் அளவு,போன்றவற்றை சோதனை செய்தல். தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுத்தல். இயந்திரங்களை பாதுகாப்பாக இயக்குதல் குறித்து பயிற்சி கொடுத்தல்,தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும், தீ அணைப்பான் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், தீ எச்சரிக்கை கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் போன்ற பல வகையான பயிற்சி கொடுத்தல்,புதிய தொழிலாளர்க்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கொடுத்தல். பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, ஹெல்மெட், முக கவசம், கண்ணாடி, பாதுகப்பு காலணிகள் முதலியவற்றை விநியோகித்தல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதா? என ஆய்வு செய்தல். தீ அணைப்பு கருவிகள் நிலை, தீ எச்சரிக்கை கருவியின் நிலை, முதலுதவி பெட்டியின் நிலை, முதலுதவி பெட்டிகள் உள்ளதா?, முதலுதவி பெட்டியிலுள்ள மருந்துகள் காலாவதியாகி உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்தல்.தொழிலாளிக்கு விபத்தோ அல்லது காயமோ ஏற்பட்டால் அதற்கான அறிக்கை தயார் செய்தல், அதனை குறித்து மற்ற தொழிலாளர்க்கு விழிப்புணர்வு அளித்தல், மேலும் இதனை போன்று ஒரு விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தல். விபத்துக்குள்ளான தொழிலாளிக்கு மனித வளம் மற்றும் நிர்வாக துறை ஒத்துழைப்புடன் இழப்பீடு வழங்குதல். தேசிய மற்றும் மாநில அரசுகளின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுதல். நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுதல். தொழிலாளர்க்கு வேலை செய்வதற்கான பாதுகாப்பான சுழலை ஏற்படுத்திக்கொடுத்தல். தொழிற்சாலையில் பயன்படுத்தும் வாகனத்தின் நிலை, குடிநீர் சேமிப்பு தோட்டியின் தூய்மை நிலை போன்றவற்றை ஆய்வு செய்தல், இடர் மதிப்பீடு, அவசர கால திட்டம், போன்ற பாதுகாப்பு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் தயார் செய்தல் பாதுகப்பு அதிகாரியின் கடமையாகும்.

தொடரும் விபத்துக்கள் :

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் தொடர்ச்சியாக பல தீ விபத்துக்கள் தொடர்ந்து நடைபெருகின்றன, நடைபெற்றுக்கொண்டிருகின்றன. கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற 90க்கும் மேற்பட்ட தீ விபத்துக்களில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்து உள்ளனர். ஆனால் இதனை போன்ற விபத்துக்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசாங்கம் புதிய சட்ட விதிமுறைகளை பிறப்பிக்காமல், கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுகிறது . இதனால் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியாக இருக்கிறது. இத்தகைய தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலையை போன்றே பல சேமிப்பு கிடங்கிலும் தீ விபத்துக்கள் தொடர்ந்து நடைபெருகின்றன. பிளாஸ்டிக், காகித, பருத்தி போன்ற சேமிப்பு கிடங்களில் நடைபெறும் தீ விபத்துக்களால் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிக்கான கல்வியை வழங்கும் அரசு நிறுவனமும், தனியார் நிறுவனமும்- சில கேள்விகளும்:

பாதுகாப்பு அதிகாரிக்கான டிப்ளமோ பாதுகாப்பு படிப்புக் கல்வியை அரசாங்கத்தின் சார்பாக இந்தியாவில் மொத்தம் ஐந்தே இடங்களில் தான் வழங்கப்படுகிறது. மும்பையில் மத்திய தொழிலாளர் நிறுவனத்தின் சார்பாக(Central labour institute) வழங்கப்படுகிறது. கான்பூர், கொல்கத்தா, சென்னை, பரிதாபாத் ஆகிய இடங்களில் பிராந்திய தொழிலாளர் நிறுவனத்தின் சார்பாக(Regional labour institue) வழங்கப்படுகிறது. டிப்ளமோ பாதுகாப்பு கல்வியை ஒரு வருடக்காலம் படிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு 50 மாணவர்களே கல்வி கற்க அனுமதிகப்படுகிறார்கள். நமது தேசத்தில் ஒரு வருடத்தில் ஐந்து இடங்களில் அரசு சார்பாக வழங்கப்படும் கல்வியை 250 மாணவர்களே பாதுகாப்பு கல்வியை கற்கிறார்கள். 120வது கோடி மக்கள் வாழும் தேசத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கான டிப்ளமோ பாதுகாப்பு கல்வியை வெறும் ஐந்தே இடங்களில் தான் அரசால் வழங்கப்படுகிறது, ஒரு வருடத்திற்கு 250 மாணவர்களே பாதுகாப்பு கல்வியை கற்கிறார்கள். தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் 1949யில் தான் அமலுக்கு வந்தது, 1949 முதல் 2015 வரை பாதுகாப்பு கல்வியை அரசின் சார்பாக16250 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிறுவனத்தில் பாதுகாப்பு கல்வி கற்கும் மாணவர்கள் அரசாங்க, தனியார் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தனியார் நிறுவனத்திலும் பாதுகாப்பு அதிகாரிக்கான டிப்ளமோ பாதுகாப்பு கல்வி வழங்கப்படுகிறது. ஒரு வருடகாலப் படிப்பை பெரும்பாலான தனியார் நிறுவங்கள் 2 மாதத்தில் முடித்துவிடுகிறார்கள். தனியார் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படும் சான்றிதழைக் கொண்டு அரசாங்க நிறுவனத்தில் விண்ணப்பிக்க முடியாது, விண்ணப்பிக்கப்பட்டாலும் அவை ஏற்று கொள்ளப்படாது. பாதுகாப்பு அதிகாரியாக விரும்பும் சாமானிய மக்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனத்தில் தான் பாதுகாப்பு கல்வியைக் கற்கிறார்கள், எனென்றால் அவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்பு கல்வி வழங்கப்படுகிறது என்பதை அறியாது இருக்கிறார்கள், தினம்தோறும் செய்தித்தாள்களில் தனியார் நிறுவங்களின் பாதுகாப்பு கல்வி குறித்து தான் விளம்பரம் வருகிறதே தவிர அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்பு கல்வி குறித்து எந்த விளம்பரமும் வருவதில்லை. பாதுகாப்பு படிப்பு கல்வி வழங்கும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இத்தகைய தனியார் நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப் பட்டதா ?. சில தனியார் நிறுவனங்களில் சர்வதேச பாதுகாப்பு கல்வி படிப்பை வழங்குகிறது. இவை (National Examination Board in Occupational Safety and Health) தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய தேர்வு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெற்ற மையமாக விளங்குகிறது. இந்த அங்கீகரிக்கப்பட்ட மையமாக இருக்கும் நிறுவனங்களில் வழங்கப்படும் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ,சர்வதேச பொது சான்றிதழ் படிப்பை கொண்டு வளைகுடா நாடுகளில், இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும், ஆனால் இந்தியாவில் சில தனியார் தொழிற்சாலைகளில் தான் வேலை கிடைக்கும்,அரசாங்க நிறுவனத்தில் வேலை கிடைக்காது, அது ஏன் என்று தெரியவில்லை?. அரசாங்கம் இதனை பற்றிய விளக்கத்தை தெரிவிக்கவில்லை? தனியார் நிறுவனங்களும், அவை வழங்கும் பாதுகாப்பு கல்வியும் அரசால் அங்கிகரிக்கப்படட்தா? இத்தகைய குழப்பங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் உரிய அறிக்கையையும் , விளக்கத்தையும் செய்திதாள்களில், இணையதளங்களில் வெளியிடவேண்டும்
.பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள குழப்பங்களும், பாதுகாப்புச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான காரணிகளும்:


  புதிய சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் தங்களது பணிகளை செய்கிறார்கள். சுடும் தார்கலிருந்து தொழிலாளிகள் தங்களது கால்பாதங்களை காப்பற்றிக்கொள்ள ஒரு காலனி கூட இல்லாமல் வாகனச் சக்கரத்தில் பயன்படுத்தப்படும் டியுப்பை அறுத்து அதை காலனியாக பயன்படுத்துகின்றனர். சுடும் தாரை வாளியில் எடுத்துச் செல்லும் பொழுது தங்களது கைகளை சுடும் தார்கலிருந்து காப்பற்றிக்கொள்ள துணியை வாளியின் கைப்பிடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். சாலைப்பணியாளர்களுக்கு சுடும் தார்கலிருந்து தற்காத்துக்கொள்ள விஷேசமான பாதுகாப்புப் கையுறைகள், காலணிகள் போன்றவை அதிகாரிகளால் வழங்கப்படுவதில்லை, இத்தகைய விஷயத்தில் அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை. மேலும் பாதுகாப்பு உபகரணங்களுக்காக வழங்கப்படும் நிதியை அபகரித்துக் கொள்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

சாலை போக்குவரத்து போலிசாரின் பாதுகாப்பு நிலைமையும் வருத்தமாக உள்ளது. வாகனத்தில் இருந்து வெளிபடுத்தப்படும் புகை, சாலைகளிருந்து வரும் தூசி, புழுதி முதலியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தங்களுடைய கைகுட்டையால் மூக்கை கட்டிக்கொண்டும், பொத்திக் கொண்டும் சுவாசிக்கிறார்கள். இதனை போன்றே வாகனத்திலிருந்து வெளிபடுத்தப்படும் புகை, தூசி , புழுதி முதலியவற்றிலிருந்து கண்களை பாதுகாத்துக்கொள்ள கண்ணாடியில்லாமல் அவதிபடுகின்றனர். சட்டையும் அரை கை சட்டையாக உள்ளக்காரணத்தால் வெயில், சூரிய வெப்பத்திலுருந்து தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள மரங்களின் நிழலில் நின்றவாரே பணிபுரிகிறார்கள். சாலை போக்குவரத்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. தொடர்ந்து பல வருடங்களாக இவ்வாறு பாதுகாப்பு உபகரங்கள் இல்லாமல் மாசடைந்த காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குளாகும்.
சாலைகளை, தெருக்களை, தூய்மைப்படுத்தல், குப்பைகளை நீக்குதல், சாக்கடைகளிருந்து குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளைச் செய்யும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்பு நிலைமை கவலையாகவும், மோசமாகவும் உள்ளது. குப்பைத் தொடியிலிருந்து குப்பைகளை கைகளால் எடுக்கப்படுவதை அன்றாடம் காண்கிறோம். துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரங்கள் வழங்கபடுவதில்லை.இதில் மிகப் பெரிய அவலம் என்ன வென்றால் செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் பொழுதும், கழிவுநீரை அகற்றப்படும் பொழுதும் விஷ வாயு தாக்கி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். செப்டிக் டேங்க் உள்ளே சுத்தப்படுத்தும்போது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும், சில சமையங்களில் விஷ வாயு செப்டிக் டேங்க் உள்ளே இருக்கும், இதனால் தொழிலாளர்கள் சுவாசிப்பதற்கு சிரமமாக இருக்கின்ற காரணத்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு துப்புரவுப் பணியாளர்களுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் வழங்கப்படுவதில்லை, துப்புரவுப் பணியாளர் உயிரிழப்பிற்கு இது முக்கிய காரணமாகும். இவ்விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அரசு இத்தகைய விஷயத்தில் அக்கறை செலுத்தாமல் மெத்தனமாகவே செயல்படுவது கவலையளிக்கிறது.
அரசுப் பேருந்துகளில் ஓட்டுனர் விபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மற்றும் காயங்களிருந்து தப்பித்துக்கொள்ள சீட் பெல்ட்டோ? காற்று பையோ இல்லை என்பது மிக வருத்தக்குரிய விஷயமாகும். இதில் மகளிர் ஓட்டுனரும் அடங்கும். தனியார் பேருந்துகளின் பாதுகாப்பு நிலைமையும் இவ்வாறே உள்ளது. எனவே அரசு, தனியார் பேருந்துகள் விபத்துக்குள்ளானால் ஓட்டுனரின் உயிர் மிக ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும்.

1.ஒரு தொழிற்சாலையில் 950 தொழிலாளர்களும் , 50 ஊழியர்களும் மொத்தம் 1000 பேர் பணிப்புரிகிறார்கள். இந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரி(Safety Officer) நியமிக்கப்படலாமா? பாதுகாப்புச் சட்டத்தின் படி 1000ம் தொழிலாளர்க்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்று தான் குறிப்பிட்டுள்ளதே தவிர ஊழியர் அல்லது தொழிலாளர்கள், ஊழியர்கள் சேர்த்து 1000ம் என்று குறிப்பிடவில்லை.

2.ஒரு தொழிற்சாலையில் மொத்தம் 2800 பேர் பணிப்புரிகிறார்கள். இதில் 1700 பேர் பகல் ஷிப்டிலும், 1100 பேர் இரவு ஷிப்டிலும் வேலைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், இரவு ஷிப்டிலும் வேலைபார்க்கும் 1100 நபர்களுக்கு யார் பாதுகாப்பு ஆய்வுசெய்வது? எனேன்றால் பாதுகாப்புச் சட்டத்தின் படி 1000 தொழிலாளர்க்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி(Safety Officer) தான் நியமிக்கப்படவேண்டும். இருக்கிற ஒரு பாதுகாப்பு அதிகாரி(Safety Officer) பகல் ஷிப்டில் தான் இருப்பார் அல்லது பகல் ஷிப்டில் வேலைச்செய்யும் தொழிலாளர்க்கு பாதுகாப்பு ஆய்வு செய்வார். இப்படி இருக்க இரவு ஷிப்டில் வேலைபார்க்கும் தொழிலாளர்க்கு யார் பாதுகாப்பு ஆய்வு செய்வது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது? இதனை போன்றே 2800,3000 தொழிலாளர்கள் பணிப்புரியும் தொழிற்சாலையில் கேன்டீன்/உணவு அருந்தும் இடம் உள்ளது, அவைகளில் உணவும் வாழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படுகிற உணவை ஆய்வு செய்ய ஒரு சுகாதார அதிகாரியோ(hygiene officer) உணவு பாதுகாப்பு(food Safety Officer) அதிகாரியோ இல்லை. தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பான முறையில் சமைக்கப்பட்டதா?, சுகாதரமான நிலையில் உள்ளதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது

3. 1000ம் தொழிலாளர்கள் பணிப்புரியும் தொழிற்சாலையில் ஒரு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்றால், 400,500,700,850 தொழிலாளர்கள் பணிப்புரியும் நூற்பு ஆலை, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை, கனரக இயந்திர தொழிற்சாலை, கேரேஜ், பட்டறை, இரசாயன நிறுவனம், ஆடை நிறுவனம் போன்றவற்றில் பாதுகாப்பு அதிகாரியில்லாமல்? யார் பாதுகாப்பான சுழலை ஏற்படுத்திக்கொள்ள போகிறார்கள்?ஒரு பாதுகாப்பு அதிகாரி இல்லாமல் தீ விபத்துக்கள், ஏலும்பு முறிவு போன்ற விபத்துக்கள் நிகழாது என்பது நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது?இதனை போன்றே 500 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு பாதுக்கப்பு அதிகாரி என்றால், 450,400,350,250 கட்டுமான தொழிலாளர்களுக்கு யார் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது? யார் பாதுகாப்பான சுழலை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்? யார் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்வது? ஒரு பாதுகாப்பு அதிகாரி இல்லாமல் எவ்வாறு விபத்துக்கள் தடுக்கப்படும்?

4. பல தொழிற்சாலையில் விபத்துக்குள்ளாகும்(விரல்,ஏலும்பு,கை முறிவுகள்) தொழிலாளர்க்கு நிர்வாகம் அதற்கு உரிய இழப்பீட்டை வழங்குவது இல்லை. நிர்வாகம் மருத்துவமனை கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை வழங்குவது இல்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. சில தொழிற்சாலையில் இழப்பீட்டு தொகையை பல தொழிலாளர்களுக்கு வழங்காமல் அபகரிகப்படுகிறது.. இதனை போன்றே தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் 500 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் ஆம்புலன்ஸ், முதலுதவி அறை, செவிலியர் இருக்க வேண்டும். ஆனால் பல தொழிற்சாலைகளில் இத்தகைய வசதிகள் இல்லை. ஆய்வு நடைபேரும் அன்றைய தினத்திற்கு மட்டும் வாடகைக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொள்கிறார்கள். தொழிற்சாலையில் மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானோர் போன்ற பல தரப்பினர் பணி செய்கிறார்கள், தொழிற்சாலையில் விபத்தோ, உடல் நலக் குறைவோ, மாரடைப்போ ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனமில்லாமல் எவ்வாறு விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல இயலும்?, எவ்வாறு தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்?

5. தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில் பல இளைஞர்களுக்கு(பாதுகாப்பு அதிகாரியாக, சுகாதார அதிகாரியாக) வேலை கிடைக்கும்.( ஒரு உதாரணமாக 1000 முதல் 3000 தொழிலாளர்க்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்பதை மாற்றி 250 முதல் 750 தொழிலாளர்க்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டால் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்). இதனால் தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்துக்கள், தொழிலாளர்க்கு ஏற்படும் எலும்பு முறிவு, விரல் முறிவு விபத்துக்கள் போன்றவை பெரும் அளவில் தடுக்கப்படும். அரசாங்கம் தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வாராவிட்டால் தீ விபத்துக்கள், எலும்பு முறிவு, விரல் முறிவு விபத்துக்கள் போன்றவை நிகழந்து கொண்டு, அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். நமது தேசத்தில் பாதுகாப்பு அதிகாரி இல்லாத தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மிக அதிகம், அவற்றில் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும். பல தொழிலாளர்களுக்கு இழப்பீடு, பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை அறியாமல், அறியப்படாமல் இருக்கிறர்கள். அரசு எவ்வாறு போலியோ, எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்,பேரணி நடத்துகிறதோ, அவ்வாறு தொழிலாளர் பாதுகாப்பு,பாதுகாப்புச் சட்டம், பாதுகாப்பு உபகரணங்கள், இழப்பீடு போன்றவற்றை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்,பேரணி நடத்தவேண்டும் தேசத்தின்,மாநிலத்தின், தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நலனில் அக்கறைகொண்டு, மேற்குறிய காரணிகளை ஆராய்ந்து, அரசுகள் இவ்விஷியத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்து தேசத்தின்/மாநிலத்தின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றியமைத்து, இழப்பீட்டைக் குறித்து,தொழிலாளர் பயிற்சி குறித்து, சாமானிய மக்கள் அறிந்துக்கொள்ளும் படி குழப்பமில்லாமல் தெளிவாக தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தை அமைக்கவேண்டும். தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றியதோடு இல்லாமல் அதனை திடீர், தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்க்கொண்டு உழைப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என்போன்ற பாதுகாப்பு அதிகாரிகளின், தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

குறிப்பிடல்:

1. Tamil Nadu Factories Act
2. Indian Factories Act 1948
3. Tamil Nadu Building And Other Construction Workers(Regulation Of Employment And Conditions Of Service) Rules, 2006.
4. The building and Other Construction Workers CESS,Rules 1996, 1998.

சதீஸ் கார்க்கி,

கோவை

No comments:

Post a Comment